Skip to content

ஐந்து பேர் நான்கு நாட்கள் முன்று ஊர்கள்!

August 25, 2016

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை முன்னிட்டு வந்த மூன்று நாள்கள் (தான் நாட்கள் அல்ல!) விடுமுறையில், கூட ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பாலக்காடு & கோவை சென்று வந்தோம் (குடும்பத்திலுள்ள ஐவரும்!). திருமணமான பின் நந்தினி அவ்வப்போது அம்மாவை சீண்டிக் கொண்டேயிருந்தாள் – “ஆனா வூனா ‘கல்பாத்தி, கல்பாத்தி’ னு நீங்க இருந்த ஊரை சொல்லிக்கிட்டே இருக்கீங்க, ஆனா ஒருதரம் கூட கூட்டிக்கிட்டே போறதில்லை”னு. இந்தமுறை “போடுறா ப்ரோக்ராமை”னு அம்மா வீறுகொண்டெழுந்து டிக்கேட் வாங்கிட்டா.

வியாழனன்று (11 ஆகஸ்ட்) ஐவரும் சேர்ந்து கிளம்பும்போது வரும் வழக்கமான வேடிக்கைகள் அனைத்தும் குறையாமல் இருந்தன – நந்தினி மாலை வீட்டுக்கு சீக்கிரம் வராததால் அப்பாம்மா பதட்டமானது, அம்மாவின் புலம்பல், இதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அர்ச்சித்தின் விஷமங்கள், வீட்டையே கட்டி இழுத்துக்கொண்டு போகுமளவு ரகவாரியான லக்கேஜ் பைகள் (ட்ராலி, தோளில் தூக்கிக்கொண்டு போகும் யூத்தான பேக்பேக்குகள், இலையில் கட்டப்பட்ட சாப்பாட்டுப் பொட்டலங்கள் அடங்கிய கேரிபேக், அவற்றுக்கான கட்டைப்பைகள், ஐந்து தண்ணீர் போத்தல்கள், இத்யாதி), எப்போதும் வெடிக்கும் உப்புப்பெறாத சண்டைகள் (அப்பா-புள்ள, அம்மா-புள்ள, கணவன்-மனைவி, மாமனார்-மாற்றுப்பெண், அம்மா-அப்பா, அர்ச்சித்-இதர அனைவரும்!), எல்லாமிருந்தும் ஒருவழியாய் வேளச்சேரியில் 8.10 ரயிலை பிடித்தோம். சேரனில் கோவைக்கு கிளம்பினோம்.

வெள்ளியன்று காலை கோவை கோனியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து, தொட்டாப்ல இருக்கும் அன்னபூர்ணாவில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு, அப்பா தவிர நாங்கள் நால்வரும் பாலக்காட்டுக்கு வண்டி பிடித்தோம். அங்கிருந்து நான், நந்தினி & அர்ச்சித் மட்டும் குருவாயூர் (ஏசி பேருந்து!). மதியம் மூன்றரை மணிக்கு வரிசையில் நின்றோம். அர்ச்சித்துக்கு கொஞ்ச நேரம் பேப்பர் ஏரோவை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தேன். பயலுக்கு அங்கிருக்கும் மக்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவனுக்கு அந்த ஏரோ மட்டும்தான் உலகம்! 6 மணிக்கு சாமி தரிசனம் முடித்து (கிருஷ்ணனை போர்த்தி எடுத்துக் கொண்டு வராத குறையாக கும்பிட்டு) மம்மியூர் சென்றோம். அங்கிருந்து 7.30க்கு பாலக்காட்டுக்கு வண்டி பிடித்தோம். 10.15க்கு பாலக்காடு. நல்லவேளை உடனே ஆட்டோ கிடைத்தது, இரவு 10.30க்கு சித்தி வீட்டுக்கு வந்துவிட்டோம். சித்தப்பா வாங்கி வைத்திருந்த சேவை அமிர்தமாயிருந்தது. காலை கோவிந்தராஜபுரம் (கல்பாத்திக்கு அருகிலிருக்கும் கிராமம்) “புழை”யில் அர்ச்சித்தை (அலற அலற!) நாலு முக்கு முக்கி எடுத்தோம். நாங்களும் குளித்து சிவன் கோயில், பன்னிரண்டாம் தெரு கணபதியான் கோயில், வடக்கந்தரை, மந்தக்கரை கணபதி எல்லாம் தரிசனம் செய்து முடிதோம். பின்னர் சித்தி வீட்டில் நல்ல சாப்பாடு!

மதியம் மூன்று மணிக்கு மேல் “மலம்புழா டேம்” – சென்னையில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு வாழ்க்கையில் பல ஆச்சரியங்கள் விட்டுப்போய்விட்டன – ஒருகாலத்தில் பெரும் சுவாரசியமாயிருந்த அணைக்கட்டுகள் இன்று சற்றே ஏமாற்றத்தைதான் தருகின்றன (ஆறேழு வருடங்களுக்கு முன் நண்பர்கள் திருமணத்தை ஒட்டி வைகை அணைக்கும், ஆழியாறுக்கும் சென்றபோதே இதை உணர முடிந்தது). 5 மணிக்கு கிளம்பி சின்மயானந்தா மடத்தினரால் நிர்வகிக்கப்படும் குருவாயூரப்பன் கோயிலுக்கு சென்றோம் (விக்டோரியா கல்லூரியின் அருகிலமைந்துள்ளது). சுத்தமான, அமைதியான இடம், கூட்டமே இல்லாத சூழல், கண்கவர் கிருஷ்ணன் – நிம்மதியாக சஹஸ்ரநாமம் ஒரு ஆவர்த்தி செய்து முடித்துவிட்டு வெளியே வந்தோம். திரும்பவும் ஆட்டோ பிடித்து மந்தக்கரை. கணபதியான் கோயிலை அடுத்த பஜனை மண்டபத்தி ஆடி மாதத்தை முன்னிட்டு பஜனோத்ஸவம். பஜனைப் பாடல்களைப் பிரதானமாகப் பாடும் இதுபோன்ற திருவிழாக்கள் பெரும்பாலும் வெகுஜன ஆதரவை எளிதாகப் பெற்று விடுகின்றன – இதில் நாமும் சுலபமாக இணைந்து பங்கேற்க முடிகிறது. பாடகர் ஒரு வரி பாடிமுடிக்கும்போது நாம் அடுத்த வரி பாடும்போது நாம் ஏதோவொன்றைச் செய்கிறோம் என்ற உணர்வு வருகிறது. மாறாக கர்நாடக இசைக்கச்சேரிகளில் பாடகர்கள் எவ்வளவுதான் மேதமையை வெளிப்படுத்திப் பாடினாலும் அதன் சூட்சுமங்கள் தெரிந்த, இசை முறையாக (பாடமாக/நெடுநாள் தொடர்ந்து) கற்ற ஒரு சிலரால் மட்டுமே அதில் லயிக்க முடிகிறது. ஆலாபனைகளின் முக்கியத்துவங்களை உணர முடிகிறது. செவ்வியல் (க்ளாசிக்) கச்சேரிகளில் ஒரு எளிய ரசிகனுக்கு வெகு சீக்கிரத்தில் சலிப்பு வந்துவிடக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

அரைமணி நேரம் இசை கேட்ட பிறகு அங்கேயே சாப்பிட்டோம். இரவு நந்தினி மனதிலா மனதோடுதான் வீட்டுக்கு வந்தாள் (முழுவதும் கேட்க முடியவில்லை என்ற குறை!). அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து ஸ்டேடியம் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ பிடித்தோம். அங்கிருந்து பல்லச்சேனாக் காவு எனப்படும் “மீன்குளத்தி பகவதி” கோயிலுக்கு பஸ். ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையாதலால் கூட்டமான கூட்டம். நான் கவனித்தவரை மலையாளிகளை விட அருகிலிருக்கும் கோவை, பொள்ளாச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்திருக்கும் தமிழர், தெலுங்கர்களே அதிகம் (பின்னர் மாமாவிடம் கேட்டபோது தொழில் செய்வோர் பலர் தொழில் சிறக்க அங்கு வேண்டுதலுக்கு வருவார்கள் என்றார்). அங்கே சிறப்பு தரிசன வரிசையில் (ரூ.601 – 4 பெரியவர்கள்+ 1 சிருவர்/சிறுமிக்கு அனுமதி) நின்று சாமி பார்த்தோம். அரவணைப் பாயசத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வண்டி பிடித்து மந்தக்கரைக்கே வந்து திரும்பவும் போஜனோத்ஸவத்தில் சாப்பிட்டோம் 🙂

பின்னர் அன்று மதியம் கிளம்பி மாலை கோவை வந்து சேர்ந்தோம். பாப்பநாயக்கன் பாளயத்திலுள்ள பெருமாள் கோயிலுக்கு போகவேண்டுமென்பதில் அப்பா குறியாக இருந்தார். அங்கே கவனித்த ஒரு விஷயம் – 2017ல் நிகழவிருக்கும் இராமானுஜரின் ஆயிரமாவது திருநக்ஷத்திரத்தை ஒட்டி (ஏப்ரல் மாதம் தொடங்கி) ஒவ்வொரு திருவாதிரைக்கும்  ஒரு ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர் (பெரும்பாலும் உபய வேதாந்திகள்) சொற்பொழிவாற்றுகிறார்கள்.  (முழுப்பட்டியல் கீழே).


ரொம்பவும் சந்தோஷமாயிருந்தது. கூடவே இதையெல்லாம் யார் கேட்க வருகிறார்கள் என்ற கவலையும்! 7.30 மணியளவில் காந்திபுரம் வந்தோம். கொஞ்ச நேரம் க்ராஸ்கட் ரோட்டில் சுற்றினோம். சாப்பிடுவது எங்கே என்று யோசனையாகவே இருந்தது. நண்பன் சேதுவுக்கு ஃபோன் போட்டேன், ஆர்யாஸை பரிந்துரைத்தான். பார்த்தால் க்ராஸ்கட் ரோட்டில் “ஃபுட் ஜாயின்ட்ஸ்” என்று சொல்லக்கூடிய சின்னச்சின்ன உணவகங்கள் ஏகப்பட்டது கண்ணில் பட்டது. “கௌரி ஃபுட் ஜாயின்ட்” என்ற ஒரு கடையில் (மாரியம்மன் கோயிலருகில்) சாப்பிட்டோம். பெரும்பாலான தெருக்கள்/பாதைகள் இன்று பார்த்தால் ரொம்ப சிறிய தூரங்களாயிருக்கின்றன. உதாரணமாய் சிவானந்தா காலனி – பவர்ஹவுஸ் செல்லும் வழி – அன்றெல்லாம் ‘இவ்வளவு தூரமா’ என்று சலித்துக்கொண்டிருக்கிறேன் – இன்று ரொம்ப சீக்கிரம் வந்து விட்டுருந்தேன்!

திங்களன்று வடவள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில் இரண்டும் பார்த்து விட்டு இரண்டு மாமாக்களின் வீட்டுக்கும் சென்றோம். “ரெட் டாக்சி”,  “உங்கள் ஆட்டோ” என்று கோவையிலும் ஓரளவு கட்டுபடியாகிற கட்டணத்தில் ஆட்டோ/டாக்சிக்கள்.

அன்று மாலை மூவரும் நான் படித்த டியூசன் சாரைக் காணச் சென்றோம். அவருக்கு மிகவும் சந்தோஷம் – அவருக்காக ஞாபகமாய் சித்திரக்கவி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அவருக்கு அதுவும் ரொம்ப பிடித்திருந்தது (சாலையில் நடக்கின்ற மாடு மூத்திரம் போகின்ற வடிவத்துக்கெல்லாம் பாட்டெழுதியிருக்கிறர்கள் என்பதை சிலாகித்துச் சொன்னார்). கூடப்படித்த பயல்கள் பற்றியெல்லாம் விசாரித்தார் – நான் அவரிடம் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் டியூசன் படித்திருக்கிறேன். நான் கல்லூரி சென்ற வருடம் பிறந்த அவரது இரண்டாவது மகன் கார்த்திகாநந்தன் இப்போது பன்னிரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறான்! முதல் மகன் விவேகானந்தன் இந்தியன் ஏர்ஃபோர்சில் பணிபுரிகிறான். க்ளிஷேவாகச் சொன்னால் “காலம்தான் எவ்வளவு வேகமா ஓடுது”! அர்ச்சித்துக்கு இடதுகை பிரதானமாக வருவதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம் (அவரது முதல் மகனும் நொட்டாங்கை 🙂 ). பழைய விஷயங்கள் பலவற்றை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். என்னை கோவைக்கு வந்து செட்டிலாகிவிடும்படி வலியுறுத்திச் சொன்னார். புது வீடு ஒன்று (ஆடி அமாவாசையன்று) வாங்கியிருப்பதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பேசிக்கொண்டிருந்தார். நந்தினிக்கு ரொம்பவும் ஆச்சரியம் (“எப்படிங்க எல்லா விஷ்யத்தையும் உங்ககிட்ட இவ்வளவு ஓப்பனாச் சொல்றரு”ன்னு வெளில வந்தப்புறம் கேட்டா!).

பின்னர் மனசில்லா மனசோடு அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம். ரயில் நிலையக்திற்கு 8 மணியளவில் வந்து சேர்ந்தோம். நந்தினியின் டிக்கெட் மட்டுமே கன்ஃபர்ம் ஆகியிருந்தது. (பயணச்சீட்டில் அம்மாப்பாவிற்கு வாங்கியிருந்தது ‘லோயர் பெர்த்’ கோட்டாவில் ரெண்டுமே “கன்ஃபர்ம்டு” சீட், எங்களுக்கு இரண்டுமே ‘வெயிட்டிங்க் லிஸ்ட்’ – அதில் கன்ஃபர்ம் ஆன ஒன்று S3யில். அம்மாப்பா டிக்கெட் S8ல்!  வேற வேற டி.டி.ஆர், இரண்டுக்கும் நடுவில் என்ஜின் – பூந்து போக முடியாது! திருப்பூரில் இறங்கி அடித்து பிடித்து ஓடி அப்பாவை அங்கே செட்டில் செய்து விட்டு, ஈரோட்டில் இறங்கி மறுபடியும் ஓடி S8க்கு வந்து, ரெண்டு லோயருக்கும் நடுவில் படுத்துக்கோண்டேன்!) ஆகஸ்ட் 16, செவ்வாயன்று தூங்கி வழிந்து கொண்டே சென்னை!

அனைத்தும் ஒருவிதம் சுகம் 🙂

Advertisements

From → family, Friends

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: