ஸ்த்ரீ ரத்னம்!
அனுராதா ரமணன் – லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் வாங்கி படிக்கும் வீட்டம்மாக்கள், தமிழ் படிக்கும் ஓரளவு நவீன யுவதிகள் போன்றவர்கள் தவிர்த்திருக்க முடியாத எழுத்தாளர். விகடனில் லே-அவுட் ஆர்டிஸ்டாக பணியாற்றியவர்.
இவரின் சில நாவல்களை லெண்டிங் லைப்ரரியிலும் ‘மாம் ஃப்ரம் இண்டியா‘வை கல்கியிலும் படித்திருக்கிறேன். எழுத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. த்ரில்லர், க்ரைம் சப்ஜெக்ட்களிலும் புதினங்களை எழுதியிருந்தாலும் இவரின் ஹோம் பிட்ச் குடும்ப நாவல்கள்தான். அதில் சில கதைகளை தைரியமான, வித்தியாசமான முடிவுகளுக்காக ரசித்ததுண்டு.
ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது – ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் எழுத்தாளரின் அற்புதமானதொரு சிறுகதையை விகடன் வெளியிட்டிருந்தது. அதில் விசேஷம் என்னவென்றால் அந்த பெண்மணியின் முதல் கதையும், அனுராதா ரமணனின் முதல் கதையும் ஒரே ஆனந்த விகடன் இதழில் வந்திருக்கிறது! ஆனால் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனின் (கொடுமையான) கட்டளைப்படி அந்த அம்மாள் எழுத்தைத் தொடர முடியவில்லை. இதை தனது இரண்டாவது கதையில் (ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்த கதையின் பெட்டிச் செய்தியில்) அவர் சொல்லியிருந்தார். (‘என்னோட கதை வெளியான அதே விகடனில் முதல் கதை வெளியான அனுராதா ரமணன் எட்டியிருக்கும் உயரத்தை பார்த்தால் ஆதங்கமாகத்தான் இருக்கிறது’). டோண்டு ராகவன் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கிட்டத்தட்ட அனுராதா ரமணனும் புகுந்த வீட்டின் கொடுமைகளை அனுபவித்திருபாரெனத் தெரிகிறது. இதுவே கூட அவரது கதைகளில் பிரதிபலிக்கிறது. என்ன செய்வது. சங்ககாலம் தொட்டு பெண்கள் இந்த மாதிரித்தானே தங்கள் சோகங்களை கரைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
அவள் விக்டனில் இவர் எழுதிய ஸ்த்ரீ ரத்னங்கள் மற்றும் பேசி ஜெயிக்கலாம் வாங்க உங்கள் பார்வைக்காக.
Update on 30.5.2010: இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2
23/06/2010 தேதியிட்ட விகடனில் மதன்:
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஊறுகாயைக் கண்டுபிடித்தவர்கள் யார்? உமக்குப் பிடித்த ஊறுகாய் எது?
உப்பும் மிளகாயும் வந்த உடனேயே ஊறுகாயும் தோன்றிவிட்டது. குளிர்ச் சாதனப் பெட்டிகள், ஐஸ் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ‘கெட்டுப்போகாமல் பாதுகாக்கக்கூடிய’ (preserve) ஒரே உணவுப் பதார்த்தம் ஊறுகாய்தான். அதாவது, காய் கறிகளை நறுக்கி உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, உலர்த்தி புளித் தண்ணீர் கலந்து ஜாடிகளில் போட்டுவைப்பார்கள். எதோடு வேண்டுமானாலும் கலந்து சாப்பிடலாம். நான் சிறுவனாக இருந்தபோது, தஞ்சா வூரில் என் தாத்தா வீட்டில், தனியாக ஓர் அறையில் அலிபாபா கதையில் வருவதுபோன்ற இடுப்பு உயர ஜாடியில் மாங்காய் தொக்கை பாட்டி தயாரித்து நிரப்பிவைத்திருப்
பார். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் ஜம்மென்று இருக்கும். அவ்வப்போது அந்த அறைக்குச் சென்று மூடியைக் கழற்றி, ஊறுகாய் வாசனையை மெய்மறந்து முகர்ந்து பார்ப்பது என் வழக்கம். ஊறுகாய் என்று இல்லை, எந்த உணவு சம்பந்தப்பட்ட பதிலாக இருந்தாலும் சரி, படித்த உடனே எனக்கு ஒரு போன் வருவது வழக்கம். எதோடு எந்த ஊறுகாயைத் தொட்டுக் கொள்ள வேண்டும், எப்படி எல்லாம் ஊறுகாய் தயாரிப்பது என்று அவ்வளவு ஊறுகாய்ச் சுவையோடு, நுணுக்கமாக போனில் விளக்குவார் அவர். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது. மறைந்த சிறுகதை ராணி அனுராதா ரமணனைக் குறிப்பிடுகிறேன்!
விமலா ரமணி – வல்லமை.காம் இல்
புகழ்மிகு எழுத்தாளரான அனுராதா ரமணன்(62), சென்னையில் 2010 மே.16 அன்று மாரடைப்பால் மறைந்தார். சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காணரமான அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே.16 அன்று மாலை இறந்தார்.
அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார். ‘சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்’ உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. பற்பல விருதுகளையும் பெற்றவர்.
அனுராதா ரமணனின் மறைவுக்கு அவரின் தோழியும் எழுத்தாளருமான விமலா ரமணி இரங்கல் கடிதம் வரைந்துள்ளார். அந்தக் கடிதம் இங்கே:============================================================அன்புள்ள அண்ணாகண்ணன் அவர்களுக்கு,
வணக்கம் பல.

வல்லமை.காம் இல் விமலா ரமணி
அனுராதா ரமணனின் மரணம் பற்றிய செய்தியைப் படித்து மிகவும் மனம் வருந்தினேன். என் பெண் ரூபாவின் திருமணத்திற்குக் கோவை வந்திருந்தார். அதற்கு முன்பே மேட்டூரில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் சென்றிருந்தபோது (அவர் அப்போது மேட்டூரில் இருந்தார்), என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். அதன் பின் அவர் கதாசிரியராக அவதாரம் எடுத்தபின் பல முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
சாவி அவர்கள் ஆரம்பித்த பத்திரிகையான சாவியில் நாங்கள் சில எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர் எழுத வேண்டி வந்தபோது, சாவி அவர்கள் வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தியது நினைவுக்கு வருகிறது. நான் மலர் மல்லிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது, அவரிடம் ஒரு சிறுகதை கேட்டு வாங்கிப் போட்ட அனுபவமும் நினைவில் நிற்கிறது. நல்ல எழுத்தாளர். காலப் போக்கில் பல கருத்து மாற்றங்கள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என் அன்பிற்குரிய தோழி, நல்ல சிநேகிதி… இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது….அன்புத் தோழியே, என் மகள் திருமணத்திற்கு உன் குருவான சாந்தா நாராயணனுடன் நீ போட்ட ரங்கோலிக் கோலம், இன்னமும் ஆல்பத்தில் இருக்கிறது. ஆனால், வண்ணம் காட்டிய விரல்கள், இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது எண்ணத்தில் வேதனை எழுகிறது.அவரின் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்திருந்தபோது, நான் சென்னையில் இருந்த காரணத்தால், அவரின் வீட்டிற்குச் சென்று விருந்துண்ட நினைவுகள் எழுகின்றன…
கோவையில் நடந்த தெய்வசிகாமணி விருது விழாவில் நாங்கள் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்…. எனக்கு உரத்த சிந்தனை அமைப்பு பரிசு தந்தபோது, என்னைப் பாராட்டிப் பேசிய என் அன்புத் தோழியே, இனிக்கின்ற நினைவுகளை எல்லாம் கண்ணீரில் கரைத்துவிட்டு, நீ எங்கே காணாமல் போய்விட்டாய்? உன் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த இரங்கலை இக்கடிதம் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
அன்புடன்,
விமலா ரமணி17.05.2010
===================
காலச்சுவடில் அம்பை: அனுராதா ரமணன் என்றொரு மனுஷி – அம்பை
அனுராதா ரமணன் மறைந்தது உங்கள் மூலமாகத்தான் தெரிகிறது. எழுத்தாளர் அல்லது நமக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள் இறந்ததை எண்ணிப் பெரிதாகத் துக்கம் கொள்கிறவனில்லை. சுஜாதா இல்லாவிட்டால் என்ன அவர் எழுதியது இருக்கிறதே என்று தோன்றுகிறது. நிற்க. நான் ஒரு இ.கோ.மு.சிங்கம் என்று விளம்பிக்கொள்ள இது அல்ல. உண்மையில் அனுராதா ரமணன் பற்றி நீங்கள் எழுதியதும் அதில் குறிப்பிட்ட தொடர்பு-சுட்டிகளும் (டோண்டு ராகவன்) அதில் படித்ததும் மனதை இளக்கி விட்டது.
அனுராதா எழுத்துகளை நிச்சயம் படித்திருப்பேன் என்று நம்புகிறேன். மனவசம் அதன் நினைவுகள்தான் இல்லை. அப்பாவைக் கேட்டால் ஒருவேளை ஒப்பிக்கக்கூடும். என் நினைவுக்கு வரும் அனுராதா வெள்ளிக் கொலுசு போட்ட ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்போது அவருக்கு பக்கவாதம். வல அல்லது இடது கால் முழுமையாகச் செயல்படவில்லை. அந்தக் காலை இயக்க அவர் அதோடு தொடர்பு கொண்ட விதம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. என்னருமைக் காலே, ஏன் இப்படி எதுவும் செய்யாம இருக்கேடா? எப்பயும் போல செயல்படு. உனக்கு என்ன வேணாலும் வாங்கித் தர்றேன். பாத்தியா இப்பக் கூட உனக்கு கொலுசு போட்டிருக்கேன் – என்ற விதத்தில் காலுடன் பேசிப்பேசி மனோதிடத்தை காலுக்குக் கற்பித்து பழைய நிலைமையை அடைந்தவர்.
நம்முடலின் எந்தவொரு பாகமும் தனித்தில்லை.. ஒவ்வொன்றும் நம்முடன் தொடர்பு (communicate) கொள்கிறது – உணர்வாக சிலசமயம் வலியாக. நாம்தான் தொடர்பு கொள்வதில்லை. அல்லது தொடர்பு கொள்ளத் தெரியவில்லை. அப்படி மனதாரத் தொடர்பு கொண்டால் உடலின் எந்தக் குறைபாட்டையும் களையலாம் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியவர். பொறுக்கமுடியாத உடல்வலி என்று ஏதாவது வந்தபோது நான் பலமுறை அனுராதா-வின் இந்த உடலுடன் பேசும் வழக்கத்தைக் கையாண்டு மீண்டிருக்கிறேன்.
Kill Bill என்ற ஆங்கிலப்படத்தில் (டொரண்டினோ இயக்கம்; உமா தர்மன் – மையக் கதாபாத்திரம்) உமா தன் சுவாதீனமில்லாத இயக்கமிழந்த கால்களை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 3 மணிநேரம் (ஒரு காரினுள் அமர்ந்தவாறே) காலுடன் பேசி (wake up wake up) ஜெயிக்கிறார். இந்தக் காட்சியில் எனக்கு அனுராதா ரமணன்தான் நினைவுக்கு வந்தார்.
எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அவர் படைப்பை அணுகுவது சரியா என்று தெரியவில்லை (அல்லது சொல்லமாட்டேன்) ஆனால் அனுராதாவின் (இந்த) மறைவு அவரின் அந்தரங்க வாழ்வை பல இடங்களில் இடுகையாக்கியிருப்பதை உணர்கிறேன். அதன் மூலம் நான் பெறும் தரிசனங்கள் அனுராதா ரமணன் என்பவரின் எழுத்தை மறைத்து அனுராதா என்ற தனிப்பட்ட மனுஷிக்காக மனதை வருத்துகிறது. பாரமாக உணர்கிறேன். எனக்கு தெரிந்த அவரின் முகம் தன்னம்பிக்கை மிக்கது.. காலுக்குக் கொலுசு அணிவித்து அதை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. அந்த முகத்தின் பின்னடர் துயரங்கள் எனக்குள் துயரத்தை விதைக்கிறது.
ஜெகன்!
இப்ப ஞாபகத்திற்கு வருது. கால்வலி குணமான பின் இவரின் பேட்டி வந்திருந்த குமுதம் இதழும் ஒரு வகையில் வித்தியாசமானது. தொடர்கள், தொடர்கதைகள் (அவைகளை சேகரிப்பவர்களின் வசதிக்காக) தவிர அனைத்து கதை, கட்டுரைகளும், வலமிருந்து இடமாக பிரசுரித்திருந்தார்கள். இதெல்லாம் படித்து மண்டை குழம்பி பைத்தியம் பிடித்து பாயைப் பிராண்டும் புகைப்படத்தை ஒட்டி அழகு பார்ப்பதற்கு, இதழின் அட்டையில் பாஸ்போர்ட் அளவு ஒரு வெள்ளை காலியிடமும் அளித்திருந்தார்கள்!
மற்றபடி உங்களின் மறுமொழியில் பல விதயங்கள் எனக்கு புதிது. இந்தப் பிரச்சனை அவரை இவ்வளவு தூரம் படுத்தியிருப்பதே எனக்குத் தெரியாது. அவ்வளவு ஸ்ரீத்தமான முகம் அவருக்கு. அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.