Skip to content

அசந்தர்ப்பங்கள்

July 25, 2010

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நாம் வாழும்(?) நகர வாழ்க்கையில் பல அசந்தர்ப்பங்கள் – அவற்றில் தலையாயது… மரணம்!

உண்மையில் மரணத்தை எதனுடனும் ஒப்பிட்டு சமாதானமாவதென்று சாத்தியமில்லை. உதட்டளவில் ’81 வயசாயிடுச்சு’, ‘கல்யாணசாவு’, ‘மனுசன் மூணு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டுத்தான்யா போயிருக்கான்’, ‘நல்லவேளை இவர் இந்தம்மாவுக்கு முன்னமே போயிட்டார்’னு ஆயிரம் சொன்னாலும் உள்ளத்தளவில் – அதுவும் பிள்ளைகளுக்கு- நிச்சயம் அது ‘ஈடு செய்ய முடியாத இழப்புதான்’. ஆனால் பிற அனைவருக்கும் ஒரு சாவின் தீவிரம் உறைப்பதில்லை. அலுவலக பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் என தினசரிப் பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மரணமும் குறுக்கிடுகிறது. அதுவும் வயதானவெரன்றாலோ, நாம் அவரைக் கடைசியாகப் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது என்றாலோ  நிஜத்தில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

இழப்புகளில் ஆண்கள் யாரும் (நான் உட்பட) அழுது பார்த்ததில்லை. அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்களின் இயல்பே அவனை இந்த விசயத்தில் அவஸ்தைக்குள்ளாக்குகிறது. அவனால் நினைத்தாலும் அழ முடிவதில்லை. அல்லது அவனுக்கு அழவே தோன்றுவதில்லை. எந்தவொரு எழுத்தாளனுக்கும் இந்த அபத்தமும் தீவிரமும் கூடுதலாகவே உறைத்திருக்கிறது. சுஜாதா தன் அப்பாவை இழந்தபோது எழுதிய ஒரு கட்டுரையில் சற்றே சீற்றம் தெரியும் – துக்கவீட்டிற்கு வந்து வயிறுமுட்டச் சாப்பிட்டுப்போவதன் அபத்தம். பாலகுமாரன் தன் அப்பாவை எரித்தபோது தோன்றிய உணர்ச்சிகள் கூட கதைக்கான வரி போலத்தான் சிந்தித்தேன் என்று முன்கதைச் சுருக்கத்தில் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பினை வாசித்தபோது அவரும் ஒரு வயதானவரின் இழப்பின்போது அங்கு நிலவும் (ஆனால் நிலவக்கூடாத) சகஜநிலை பற்றி விவரித்திருக்கிறார். ஐஸ்பெட்டியில் அந்த அப்பாவிற்கு கிடைத்த படுக்கையை, அதை ஏற்பாடு செய்த, கதை நாயகனின் நண்பர் பெரிதாய் சிலாகிக்கிறார். ஜெயமோகனும் சுஜாதா மரணத்தின்போதும், தன் பெற்றோரை இழுந்தபோதும் எழுந்த எண்ண அலைகளைப் பதிவு செய்திருக்கிறார். நான் வாசிக்காத பலரும் இதைப் பற்றி நிச்சயம் எழுதியிருக்கக்கூடும். இந்தளவு சிக்கல்கள் இல்லாமையாலோ அல்லது வேறு பல காரணங்களினாலோ பெண்கள் இயல்பாகவே அழுது விடுகிறார்கள்.

இந்த சமயத்தில் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் ‘அது அந்தக் காலம்’ கட்டுரைத் தொகுப்பு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. காந்தி இறந்தபோது பெரும்பாலான இந்தியாவே அதை நம்ப மறுத்ததாம்! அவ்வளவு எளிதான வாழ்வு அவர்களுக்கு சித்தித்திருக்கிறது.

ஓரிண்டு வாரங்களுக்கு முன் நண்பனொருவனிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சோகம் உறைக்காததைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது அவன் சொன்னது – ‘அவர் செத்தது உன்னை பாதிக்கனும்னா அவர் இருந்தபோது நீ அவர்கிட்ட நெருக்கமாயிருந்திருக்கனும்; அன்பு செலுத்தியிருக்கனும்’! சத்தியமான வார்த்தை.

பி.கு. இதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை – பாஸ்கர் சக்தியின் ‘பழுப்பு நிற புகைப்படம்’ கதை – கிட்டத்தட்ட அந்த கிராமமே ஆத்தா கிழவியின் சாவுக்குக் காத்துக் கிடக்கும்! அதில் பாஸ்கரின் சில சொல்லாடல்களையும் சம்பவங்களையும் சிரிப்பு வராமல் படிப்பது கஷ்டம்!

பிறசேர்க்கையாக விகடனில் இன்று(31/3/2011 – மறக்கமுடியாத தேதி!) வெளியான மரணத்தின் முன் ஏற்பாடுகள் கவிதை!

மரணத்தின் முன் ஏற்பாடுகள்

ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்

அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்

தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்

பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்

‘எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி

எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்

தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க…
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!

About these ads

From → Rants and Raves

5 Comments
  1. “அவற்றில் தலையாயது… மரணம்!”

    வாழ்வதே தலையாய பிரச்னை தான் :)

    ஒரு வகையில் ஆண் பிள்ளைகள் அழ கூடாது நு கெத்து maintain பண்ணி தான் இந்த சாபத்துக்கு ஆள் ஆகிறோம். உணர்சிகளை வெளிபடுத்த கூட முடியாத இந்த சமுகத்தில் அப்டி என்ன சாதிக்கிறோம் ன்னு தான் தெரியல.
    நம்ம நாட்டை பொருத்தவரைக்கும் மரணம் என்பது வெறும் ஒரு
    statistic தான். :(

    • ஹரீஷ்!
      ‘ஆம்பளை அழப்பிடாது’ங்கற கற்பிதம் ஒரு காரணமாயிருந்தாலும் நம் தலைமுறை இளைஞர் யுவதிகள் பலருக்கும் மனம் வெகுவாய் கெட்டிதட்டி போய்விட்டதென்பதே என் அவதானம்;ஆதங்கம்! என் வேலையை, என் உயிரை பாதிக்காத எதுவும் என்னை பெரிதாய் சலனப்படுத்துவதில்லை… சஞ்சலப்படுத்துவதில்லை. அந்தளவு நுகர்வோர் கலாசாரம் நம்மை வார்த்து வெச்சிருக்குது!

  2. ஹலோ வெங்கட்,

    எப்படி இருக்கீங்க?

    செத்துட்டா அழக்கூடாதுன்னு ஆன்மீக புத்தகத்தில் படித்த ஞாபகம்..

    அப்படி அழுதால் இறந்தவர்களின் ஆவி மீண்டும் நம்மிடம் வர அலையுமாம். அடுத்த பிறவிக்கு அது வழி வகுக்குமாம். இது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. மரணம் என்பது நம்முடைய இழப்பு என்பது மறுப்பதற்கில்லை. அழ நினைப்பவர்கள் அழுது கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எனக்கும் மரணத்தைப் பார்த்தால் அழுகை வராது. உண்மையில், மற்றவர்கள் அழுவதைப் பார்த்துத் தான் அழுகை வரும். குறிப்பாக பெண்கள் அழுவதைப் பார்க்கும் பொழுது.

  3. Your logic about death is 100 percent correct.I also feel the same experience in such placeses.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: